தேனி: தேனியில் கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தனியார் ஏடிஎம் இயந்திரத்தினை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் சம்பவம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏடிஎம் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் கிராமத்தின் மெயின் ரோட்டில் தனியார் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரம் கடந்த 15 நாட்களுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட்12) அதிகாலையில் ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தினை ஒருவர் தேங்காய் உரிக்கும் கம்பியை வைத்து உடைத்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவலர் ஏடிஎம் மையத்திற்குள் சத்தம் கேட்பதை கண்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஒருநபர் தேங்காய் உரிக்கும் கம்பியைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்த நபரை ரோந்தில் இருந்த காவலர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணுடன் தனிமையில் இருந்தவரை மிரட்டி பணம், நகைகள் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது!
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏடிஎம் மிஷினை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபர் வருசநாடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும், அவர் ஒரு தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.
மேலும் பாண்டியன் பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றதாகவும், அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாண்டியன் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பாண்டியனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதிர்ஷ்டவசமாக இயந்திரத்தின் உள்ளிருந்த பணம் திருடு போகாமல் தப்பியது. இதனைத்தொடர்ந்து ஓடைப்பட்டி காவல்துறையினர் பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடனை அடைப்பதற்காக கூலி தொழிலாளி ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பாஸ்போர்ட்டில் சென்னை வந்த இலங்கை குடும்பத்தினர் சிக்கியது எப்படி?