தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கண்டமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில், மான், மயில், செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் பெருமாள் கோவில் வனப்பகுதியில் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இந்தத் தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம், வனவர் செல்வராஜ், கால் நடை மருத்துவர் வெயிலான், வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் இறந்த மயிலின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் இறந்தது சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் மயில் என்றும், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்டமாக தெரியவந்தது. இதனையடுத்து, இறந்த மயிலின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு இந்திய தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் மலைப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து கண்டமனூர் வனச்சரக வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் வனத்துறை அலுவலர்கள் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.