தேனியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தேனி மாவட்டத்தில் தற்போது அதிகமாக மனமகிழ் மன்றங்கள் இயங்கிவருவதாகவும், இந்த மனமகிழ் மன்றங்கள் நிரந்தர கட்டடங்கள் இல்லாமல் தற்காலிக கூரை அமைக்கப்பட்டு பாதுகாப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி தொழிலாளர்கள் தங்களது தினசரி சம்பளப் பணத்தை சூதாட்டத்தினால் இழந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்த அவர், மனமகிழ் மன்றத்தில் சூதாட்ட போட்டியில் தோல்வி அடைவோர் அடைத்து வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பணம் செலுத்திய பின்பு அந்நபர்கள் விடுவிக்கப்படும் கொடுமை நடந்துவருவதாகவும் புகார் கூறினார்.
இதனால் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் எனவும் இது போன்ற சம்பவங்களுக்கு காவல் துறையினரும் உடந்தையாக செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர், இக்காரணத்தால் தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி உள்ளிட்டோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையினர் சிறப்புக் குழு அமைத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனுமதிபெற்ற மனமகிழ் மன்றங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனமகிழ் மன்றத்தின் அனுமதியை ரத்து செய்யவும் காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் திருட முடியாததால் ஆத்திரம்: சிசிடிவியை உடைத்துவிட்டு தப்பியோட்டம்!