தேனி: மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு, கேரள மாநிலம் மட்டும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், கோயில் தலத்திற்கு புனித நீர் எடுக்கவும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் தேனி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவமழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் அருவிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அதில் சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கடந்த மாதம் ஆகஸ்ட் 2ஆம் தேதி பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு குறைந்து நீர் வரத்து சீரானது. இந்நிலையில் சுருளி அருவியில் குளிக்க அனுமதிப்பார்கள் என்று நினைத்து அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்கின்றனர்.
இதனால் சுருளி அருவி பகுதியில் வியாபாரம் செய்து வரும் சில்லறை வியாபாரிகள் கடந்த 30 தினங்களாக பொதுமக்கள் வருகையின்றி உள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதனை நம்பி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், விரைவில் சுருளி அருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு