தேனி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட அதிமுக, தன்னார்வலர்கள் ஆகியோர் குளம், கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 12 குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அங்கு, அதிமுக சார்பில் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் குளங்கள் தூர்வாருதல், நீர்வழிப்பாதை சரிசெய்தல், கரைகளைப் பலப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேனி ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள தாத்தப்ப கவுண்டர் கண்மாய் தூர்வாரும் பணியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் நேற்று தொடங்கிவைத்தார்.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் கண்மாய் முழுவதும் தூர்வாரி, வரத்துக் கால்வாய், உபரி நீர் வாய்க்கால் பாதைகள் சீரமைக்கப்படவுள்ளன. தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் மாவட்டத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கண்மாய், குளங்கள் விரைவில் தூர்வாரப்படவுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.