தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட டொம்புச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு சுஜா சிதம்பரம் என்ற பெண் போட்டியிடுகின்றார். இவருக்கு தேர்தல் ஆணையம் சார்பாக கத்திரிக்காய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுஜா சிதம்பரம் டொம்புச்சேரி மக்களிடையே கையில் கத்திரிக்காய் வைத்துக்கொண்டு வினோதமான முறையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இவர் மேற்கொள்ளும் பரப்புரை அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களிடையே ஊரக உள்ளாட்சி தேர்தல் சின்னங்கள் பற்றிய குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், சுஜா சிதம்பரம் மக்கள் மனதில் தனது கத்தரிக்காய் சின்னத்தை பதிய வைக்கும் வகையில் வினோதமான முறையில் கையில் கத்திரிக்காய் வைத்துக்கொண்டு வீடு வீடாகவும், கடைகள் தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களுக்கும் கையில் கத்திரிக்காயை கொடுத்து உடன் அழைத்து வருகிறார்.
மேலும், பரப்புரையில் பேசிய அவர், "கடந்த ஆறு வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், கட்சிக்கு அப்பாற்பட்டு சொந்த ஊர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன்" என உறுதியளித்து வருகிறார். ஊராட்சி மன்ற தலைவருக்கு முதல் முறையாக போட்டியிடும் தான், இதற்கு முன்னாள் பல சமூக சேவைகள் செய்து வந்ததாகவும், தற்போது ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் தன் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தான் தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தருவேன் எனவும் கூறுகின்றார்.
இதையும் படிங்க: 1951 முதல் தேர்தலையே சந்திக்காத கிராமம்!