கரோனா நோய் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி, இடுக்கி மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளும் அடைக்கப்பட்டன.
ஆனால் தடை செய்யப்பட்ட வனப்பாதை வழியாக சிலர் இரு மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களை காவல்துறை, வனத்துறையினர் கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து எச்சரித்து வந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவில் இருந்து 7 பெண்கள் உள்பட 13 பேர் நடந்தே வந்துள்ளனர்.
இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தேவராத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்தவர்கள் எனவும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என தெரியவந்தது.
ஊரடங்கால் தற்போது வேலைவாய்ப்பு கிடைக்காததால் வருமானமின்றி உணவுக்குக் கூட அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நடந்தே சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்து வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படாததையடுத்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் தேனி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை செய்து அனைவரையும் தனி வாகனம் மூலம் கொல்லிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு