தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் வாஷித் அகமது. புதிதாக இடம் வாங்குவதற்காக ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையால், தங்க நகைகளை விற்று பணம் பெறுவதற்காக தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தை நாடியுள்ளார்.
அங்குள்ள மேலாளர் இந்துராணி, தங்களது நிறுவனம் தங்க நகைக்கு ஈடாக கடன் மட்டுமே தருவதாகவும், விற்பனை செய்வதற்கு போடியில் தனக்குத் தெரிந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்த முன்னாள் நகை மதிப்பீட்டாளரிடம் அளித்தால், அவர் நகையை விற்று பணம் தருவார் எனக்கூறி, லலித்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று போடிக்கு வந்த வாஷித் அகமதுவிடம் இருந்து 28 சவரன் தங்க நகைகளை விற்று ரூ.9.35 லட்சம் வரையில் பணம் பெறலாம் என லலித்குமார் கூறியுள்ளார். பின்னர் நகைகளை வாங்கிச் சென்றவர் மறுநாள் வரை பணத்துடன் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாஷித் அகமது, போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இன்று(நவ.30) நகை மதிப்பீட்டாளர் லலித்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மகளுடைய காதலனின் பெற்றோரை கொலை செய்த தந்தை - இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!