தமிழ்நாடு முழுவதும் வருமான வரித் துறையினர் அவ்வப்போது திடீரென அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த கோபால் என்பவருக்குச் சொந்தமான இருவேறு இடங்களில் அமைந்துள்ள நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு, சின்னமனூர் பிரதான சாலை, கம்பம் வேலப்பர் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கருப்பையா பிள்ளை நகைக்கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில், கடையின் ஆவணங்கள், ரொக்கப்பணம், தங்க நகை இருப்பு உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த சோதனையானது சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.