பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் 2019 - 20ஆம் கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தேனியில் உள்ள என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 97 அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்து 168 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கருணை அடிப்படையில் ஒன்பது நபர்களுக்கு நடத்துநர் பணி நியமன ஆணைகளையும் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
விழாவில் பேசிய பன்னீர்செல்வம், '2015ஆம் ஆண்டு என்பதற்குப் பதிலாக, 1911ஆம் ஆண்டு 5வது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கின்ற வரி வருவாயை மீண்டும் மக்களுக்கே சென்றடைந்து பயனடையும் வகையில் தொலை நோக்குப் பார்வையுடன் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியதாக' கூறினார்.
இதனால் அரங்கினில் இருந்த ஆசிரியர், மாணவர்கள் உள்பட அனைவரும் சுதந்திரத்திற்கு முன்னரே ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தாரா என்று சந்தேகமடைந்தனர்.
இந்த விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: ஓ.பி.ஆர் விஷயத்தில் ஏன் அமைதியாக இருந்தோம் தெரியுமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி