தமிழ்நாட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் குளம், கண்மாய்களை தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கைலாசபட்டியில் உள்ள பாப்பையம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணிகளை, தன் சொந்த நிதியில் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக, அப்பகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு விவசாயம், நீர்வழிப்பாதையை சரிசெய்திட உத்தரவிட்டார். மேலும் கண்மாய் கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.