கரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏராளமான மதுபாட்டில்கள் முன்னதாகவே வாங்கி பதுக்கி வைத்து தற்போது கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக கூடலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், கூடலூர் வடக்கு தனிப் பிரிவு காவலர்கள் ரகசிய ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கருநாக்கமுத்தன்பட்டி பகுதியைச் சார்ந்த செல்வேந்திரன், ரஞ்சித்குமார், மற்றும் வீரணன் ஆகிய 3 பேர் வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 524 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் வடக்கு காவலர்கள், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தடையை மீறி வெளியில் சுற்றினால் 14 நாள்கள் மருத்துவமனை கண்காணிப்பு