திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று(ஜன.19) மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் தேனியில் நாளை(ஜன.20) மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்துக் கொன்றதாக மக்கள் மத்தியில் பேசி வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை ஆணையத்தில் தற்போதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்காமல் காலம் தாழ்த்திவருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
சிறையில் இருந்து சசிகலா விடுதலையானாலும்கூட அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு 15 பிரிவுகளாக பிரிவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர, ஒற்றுமையாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்த ஓபிஎஸ், கோடிக்கணக்கில் செலவு செய்து நாளிதழ்களில் தன்னைப் பற்றி விளம்பரம் செய்துவருகிறார். இதன் மூலம் இருவருக்குள்ளும் பிரச்னை இருப்பது அப்பட்டமாக தெரிகிறது" என்றார்.