கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த வாரம் இடுக்கி அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து புவியியல் ஆய்வு துறையினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதனையடுத்து மீண்டும் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை பொதுமக்கள் உணர்ந்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 30கி.மீ தொலைவில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் நெடுங்கண்டத்தை மையமாகக் கொண்டு கட்டப்பணை, காஞ்சியார், உப்புதரை, ஆனவிலாசம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடி இடிப்பதை போன்று அதிக சப்தத்துடன் பூமி குலுங்கியதை மக்கள் உணர்ந்தனர்.
அதைத்தொடர்ந்து, பலரது வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே புவியியல் ஆய்வு துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில், ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக நிலநடுக்கத்தின் அளவும் பதிவாகியுள்ளது.
2018 - 2019ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சம்பவங்களே இந்த நிலநடுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே புவியியல் ஆய்வுத்துறையினர் உரிய முறையில் பரிசோதனைகளை செய்தும் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்திற்கான காரணம் என்ன என்பதனையும் மக்களிடம் தெரிவிக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஒருபுறம், பறவைக் காய்ச்சல் மறுபுறம் என கேரள மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் இடுக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கேரள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.