தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை(40). இவருக்கு வள்ளி (35) என்ற பெண்ணுடன் திருமணமாகி ரமேஷ் (15), தினேஷ் (12) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளியான வெள்ளத்துரை கடந்த 24ந் தேதி பாலக்கோம்பை - ராயவேலூர் சாலை அருகே உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வெள்ளத்துரையின் மைத்துனர்கள் சண்முகவேல்(33), தெய்வேந்திரன்(39), மாமியார் தங்கம்மாள்(50), மனைவி வள்ளி(35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வரும் மனைவி வள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெள்ளத்துரை மது போதையில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வள்ளியின் சகோதரர்கள் முன்பாகவே சண்டையிட, வெள்ளத்துரைக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அடிக்கடி சண்டை போடும் வெள்ளத்துரையை கொலை செய்ய மைத்துனர்கள், மனைவி மற்றும் மாமியார் திட்டமிட்டுள்ளனர்.
அன்றே மைத்துனர்கள் சண்முகவேல், தெய்வேந்திரன் ஆகியோர் வெள்ளத்துரையை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச்சென்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பின்னர் மறைத்து வைத்திருந்த கட்டையால் வெள்ளத்துரையை தாக்கியுள்ளனர்.
இதில் வெள்ளத்துரை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அதன்பின்னர் மைத்துனர்கள் இருவரும் எதுவும் தெரியாதது போல ஊருக்குள் நடமாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கூலித் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜதானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் வாங்க கடன் தாங்க' - வங்கியில் மாணவ அமைப்பினர் மனு