தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர், மாரியப்பன். இவரின் தங்கை சிவனம்மாள். மாரியப்பன் தனது தங்கை சிவனம்மாளை அதே ஊரைச் சேர்ந்த சுருளிராஜ் என்பவரின் மகன் கருப்பசாமிக்கு (30) திருமணம் முடித்து வைத்தார்.
கருப்பசாமி - சிவனம்மாள் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கருப்பசாமிக்கும் சிவனம்மாளுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வந்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான தகராறு நடந்ததால் சிவனம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு, தனது குழந்தைகளுடன் அதே ஊரில் வசிக்கும் தனது அண்ணனான மாரியப்பன் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார்.
கடந்த மூன்று மாதமாக அண்ணன் வீட்டில் தங்கியுள்ள மனைவி மேல் ஆத்திரம் கொண்ட கணவன் கருப்பசாமி, அவரது மனைவியை மாரியப்பன் வீட்டில் இருந்து வெளியில் தரதரவென இழுத்துச்சென்று தேனி சுருளி அருவி செல்லும் சாலையில் வைத்து மயக்கம் போட்டு விழும் நிலை வரை, அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனைத் தடுக்கச் சென்ற பொதுமக்களையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் அவரை விலக்க யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை அருகில் இருந்த பொதுமக்கள் தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோவானது அப்பகுதியில் வைரலாகப் பரவி வருவதை அறிந்த காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாக வைத்து கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கருப்பசாமியின் தாக்குதலில் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்ட சிவனம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: Cotton Gambling: ராணிப்பேட்டையில் கொடிகட்டி பறக்கும் காட்டன் சூதாட்டம் - காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா?