தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி(26). இவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஹோட்டல் தொழிலாளியான சின்னமனூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யுவஶ்ரீ (3) புவனேஷ் (1.5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் பாலகிருஷ்ணனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாண்டிசெல்வி இன்று (அக்டோபர் 27) புகார் அளிக்க வந்திருந்தார்.
அப்போது, காவல் துறையினர் சோதனை செய்ததில் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டில் கைப்பற்றப்பட்டது. இதனால், தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தன்னை விட்டு பிரிந்துச் சென்ற கணவர் பாலகிருஷ்ணன் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் வரவில்லை. இரண்டாவதாகப் பிறந்த குழந்தையையும் கூட பார்க்க வந்ததில்லை. மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் வனஜா ஆகியோருக்கு தெரிந்திருந்தும் தகவல் தர மறுக்கின்றனர். எனவே இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வாழ்ந்து வருவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட வந்ததாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, போடி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சங்கரன் உத்தரவிட்டதையடுத்து அவர் போடிக்குச் சென்றார். இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.