தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜதாசன்(55). தேனியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், அப்பகுதியினருக்கு 'தபால்தலை, நாணயங்களின் களஞ்சியம்', 'தேனி ராஜதாசன்' என்றால் வெகு பிரசித்தம். அந்த அளவிற்கு தபால் தலைகள், அஞ்சல்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை சேகரித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, திலகர், மாபொசி, வ.உ.சி, பாரதியார், கொடிகாத்தகுமரன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், உள்ளிட்ட ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் உருவம் பதித்த தபால் தலைகள், நாணயங்களைத் தான் அதிக அளவில் சேகரித்து வருகிறார்.
தலைவர்களின் மீது அவ்வளவு பற்றா என கேட்டதற்கு, "ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றனர். அதில் இடம் பெற்ற மகாத்மா காந்தியடிகளின் இந்திய சுதந்திரப் போராட்ட காட்சி என்னை அவர் மீது பற்றுக் கொள்ள செய்தது.
மேலும் சுதந்திர தாகம் என்னுள் ஒட்டிக் கொண்டது. இதன் விளைவாக பள்ளிப் பருவம் தொட்டு தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களது போராட்ட குணங்கள் குறித்து அறியத் தொடங்கினேன். தொடர்ந்து தலைவர்களின் உருவம் பதித்து வெளிவரும் சிறப்பு தபால் தலைகள், அஞ்சல்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்கத் தொடங்கினேன்" என்றார்.
வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!
மேலும் பண்டைய காலங்களில் பயன்படுத்திய நாணயங்கள், முக்கிய பகுதிகளின் சிறப்பு தபால் முத்திரைகள், அஞ்சல்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர் கால நாணயங்கள், திருவிதாங்கூர் சமஸ்தானம், இந்தூர், மைசூர் மகாராஜா, ஜார்ஜ் மன்னர் காலங்களில் பயன்பாட்டில் இருந்த செப்பு நாணயங்கள், திருவள்ளுவர் ஆண்டில் பயன்படுத்திய ஈயக்காசுகள், சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் முதலானவற்றையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், எகிப்து, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பழமையான ரூபாய் நோட்டுகள், நாணயங்களை சேகரித்து வைத்துள்ளேன். காதல் கவிதைகள், மதக் கோட்பாடு வாசகங்கள், தலைவர்களின் உருவங்களை கேலியாக சித்தரித்த ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வரும் நான், சுதந்திரத்திற்காக தன்னுயிர் நீத்த தலைவர்களின் தியாகங்களை, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்" என்கிறார்.
'லேப்டாப் இல்லை... போன் இல்லை... டிவி இல்லை... இருந்தாலும் படிக்கிறோம்'
இவ்வளவு காலம் சேகரித்து வரும் இவற்றினால் யாருக்கேனும் பயன்பாடு ஏதும் கிடைத்துள்ளதா என்றதற்கு, பள்ளி - கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு இலவசமாகவே எனது தொகுப்புகளை காட்சிப்படுத்தி விளக்கியுள்ளேன். அதனை அறிந்து கொண்ட மாணவச்செல்வங்கள் போட்டிகளில் பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை பெற்றிருப்பது எனக்கு பெருமையாக இருப்பதாகக் கூறுகிறார் மகிழ்ச்சியாக.!
இவரின் முயற்சி குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் கூறும் போது, "கணிப்பொறி, இணையதளம், சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இன்றைய தலைமுறையினர், பண்டைய கால மரபுகள், பழக்கவழக்கங்கள், சரித்திரங்கள் ஆகியவற்றை இதுபோன்ற சேமிப்புத்திறனால் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்றுச் சிறப்புகளை சேகரித்து பாதுகாத்து வரும் தேனி ராஜதாசன் தேனிக்கே கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறோம்" என்று பெருமிதம் கொண்டார்.
மறைந்து போன வரலாறு, மரபுகளை சேகரித்து, பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதனை இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என காட்சிப்படுத்தி வரும் தேனி ராஜதாசன் பாராட்டுக்குரியவரே...