தேனி: ஆண்டிபட்டி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி தூர்வாரி சுத்தப்படுத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசே தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, தலைக்கவசம், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களையும், சுத்தப்படுத்துவதற்கான கருவிகளையும் அளித்துள்ள நிலையில், ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் அதனை கடைபிடிக்காமல் தூய்மை பணியாளர்களை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது
இந்நிலையில் ஆண்டிபட்டி ஓடை தெருவில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள பிரதான கழிவுநீர் வாய்க்காலில் மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் ஒருவர் கையுறை, காலுறை, முகக்கவசம், மற்றும் வாய்க்காலை சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவிகள் ஏதும் இல்லாமல் கைகளால் சுத்தப்படுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உட்பட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும், அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக கூறுகின்றனர்.
எனவே தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆண்டிபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபட வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போடியில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை.. அலைமோதிய மக்கள் கூட்டம்!