ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாகக் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல் துறையினர் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கம்பம்மெட்டு சாலை வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்கேத்திற்கிணங்க வந்துகொண்டிருந்த காரை துரத்திப் பிடித்தனர்.
அதில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்த இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிஜு (46), நிஜித் (40) எனத் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து, கடத்த முயன்ற 18 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கம்பம் காவல் துறையினர் கேரளாவைச் சேர்ந்த இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தப்படுவதை நிறுத்திட காவல் துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்து-வருகின்றனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ