தேனி மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி, சத்திரப்பட்டி, குன்னூர், கண்டமனூர், ஆண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, சென்டை, செவ்வந்தி, சம்பங்கி, முல்லை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி நடைபெறுகின்றன. இங்கு விளைகின்ற பூக்கள் தேனி, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள சந்தைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நிலவும் குளிர்காலத்தால் பூக்களின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூக்கள் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. மல்லிகை கிலோ ரூ.3,500 வரையிலும், செவ்வந்தி, சென்டைப் பூக்கள் ஒரு கிலோ சராசரியாக ரூ.1,000 வரையிலும் விற்பனையாகின்றன. இதன் காரணமாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பூ வியாபாரி பாண்டி கூறுகையில், ”தைப்பொங்கல், சபரிமலை சீசனால் பூக்களின் தேவை அத்தியாவசியமாகிறது. விலையேற்றம் அதிகரித்திருந்தாலும், பொதுமக்கள் அதிகளவில்தான் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். பனிப்பொழிவு குறைந்து பூக்களின் வரத்து அதிகரிக்கும் வரையில் இந்த விலை உயர்வு நீடிக்கும்” என்றார்.
விவசாயி அழகர்சாமி கூறுகையில், “பொதுவாகவே கார்த்திகை, மார்கழி மாதங்களிலுள்ள பனிப்பொழிவால் பூக்கள் மொட்டிலேயே கருகிவிடுகின்றன. இதனால் 30 சதவீத பூக்கள் வரத்து குறையத் தொடங்குகிறது. வரத்து குறைந்தாலும் பண்டிகைகால தேவைக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், விலை அதிகரித்துவருகிறது. இதனால் ஓரளவுக்கு நஷ்டம் ஈடுகட்டப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகளின் பேரணி