தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவர் கம்பம் புதிய பேருந்து நிலையம் சாலையில் மரக்கடை நடத்திவருகிறார். மேலும், பழைய கட்டடங்களிலிருந்து இடித்து எடுக்கப்பட்ட மரக்கதவுகள், ஜன்னல், மரக்கட்டைகள் உள்ளிட்ட மரப்பொருள்களைச் சேகரித்து விற்பனைசெய்வதற்காக இக்கடையில் வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் பூட்டியிருந்த கடையின் கதவு வழியாகப் புகை தென்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கம்பம் தீயணைப்புத் துறையினர் கடையினுள் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைப்பதற்காக தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
மேலும் அக்கம்பக்கத்திலிருந்த தண்ணீரைக் கொண்டும் பொதுமக்களும் அத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக உத்தமபாளையம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது.
இந்த தீ விபத்தின் கடையில், பலவகை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. இதன் மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் கடையின் அருகே கட்டடங்கள் இருப்பதால், அக்கட்டிடங்களின் மீது தீ பரவாமல் இருப்பதற்காக அங்குள்ள பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.
இந்தத் தீ விபத்திற்கு காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தீப்பிடித்த கடை அருகே அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலி லாலா மிட்டாய் கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!