தேனி: பூதிப்புரம் சாலையில் ஏராளமான இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள், மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சீட் கவர் தயாரிக்கும் ஆலையில் இருந்து நேற்று (மே 30) மாலை எதிர்பாராத விதமாக தீ பற்றியது.
காற்றின் வேகம் காரணமாக, தீ மளமளவென பரவி அங்கிருந்த பர்னிச்சர், ஆயில் வைத்திருக்கும் அறையில் பற்றியது. இதனையடுத்து அதேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டன.
சீட் கவர் ஆலையில் இருந்த ஜீப், கார், ஆட்டோ ஆகியவை முழுமையாக தீ பற்றி எரிந்தது. உள்ளே இருந்த ஆயில் பேரல்கள் தீ பிடித்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. தீ அடுத்தடுத்த ஆலைகளில் பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முற்றிலுமாக தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!