நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கீரைகளில் கொத்தமல்லி கீரையும் ஒன்று. சமையலில் முக்கிய அங்கம் வகிப்பதோடு கொழுப்பு, நீரிழிவு நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருக்கிறது. சந்தைகளில் அதிகமாகக் கிடைக்கும் பொருளான கொத்தமல்லி கீரை வரத்து அதிகமானதால் ஆற்றில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, பள்ளபட்டி, கொடுவிலார்பட்டி, அம்மச்சியாபுரம், அரண்மனைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி நடந்துவருகிறது. விதையாக நடவுசெய்த 45 நாள்களில் அறுவடைக்குத் தயாராகி பலன்தரக்கூடிய குறுகிய காலப் பயிராக இருப்பதால் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்த ஆண்டு பெய்த பருவமழையினால் நன்கு விளைந்த கொத்தமல்லியின், வரத்து கூடியதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விளைந்த கொத்தமல்லியை பறித்து ஆற்றில் போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ் கூறுகையில், "விதை, உரம், மருந்தடித்தல், களை பறித்தல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகபட்சமாக கிலோ 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. கார்த்திகை, மார்கழி மாத விரத கால சீசன் என்பதால் காய்கறிகளின் விலைகள் உயர்ந்தே காணப்படும்.
இதனை எதிர்பார்த்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது கிலோ பத்து ரூபாய்க்குக்கூட கொள்முதல் விலை கிடைப்பதில்லை. கரோனாவால் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. உற்பத்தி அதிகரித்து வரத்து, உயர்ந்ததால் சந்தைகளில் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்ட தயங்குகிறார்கள். சிலர் சந்தைக்கு எடுத்து வர வேண்டாம் என்கிறார்கள்.
இதனால், பயனற்று பூப்பூத்த நிலையில் நிலத்தில் கிடக்கும் கொத்தமல்லியை பறித்து ஓடுகிற வைகை ஆற்றில் கொட்டிவருகிறோம்" என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’இரவுக்குள் 80% மின் இணைப்புகள்’ - அமைச்சர் தங்கமணி தகவல்