தேனி: போடிநாயக்கனூர் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் தரம் இல்லாத அவரை விதையால் புழுக்கள் அதிகமாகத் தோன்றி விளைச்சல் குறைந்ததால் விலையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது, பொட்டிபுரம் கிராமம். முற்றிலும் விவசாயம் சார்ந்த இந்த கிராமத்தில், அவரைக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் விளைந்த அவரைச் செடிகளில் பூக்கள் அதிக அளவில் பூத்த நிலையில் சரிவர காய்கள் இல்லாமல் இருந்துள்ளது.
மேலும், காய்க்கும் காய்களில் பெரும்பாலான காய்கள் மஞ்சள் பூத்த நிலையிலும், அதிகமாக புழுக்கள் உள்ள நிலையிலும் இருந்துள்ளது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக்குறைவான விளைச்சல் ஏற்பட்ட நிலையில், மஞ்சள் பூத்த காய்கள் முற்றிய நிலையிலேயே அவரைச் செடிகளில் விடப்படுகிறது.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை; சென்னை மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
புழுக்களால் பாதிக்கப்பட்ட காய்கள் விற்பனையாகாமல் சாலையோரங்களில் வீசப்பட்டும், மாட்டுக்கு உணவாகியும் வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ஒன்றிற்கு ரூபாய் 60 முதல் 80 வரை ரகம் பிரித்து விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நேரில் சென்று செடிகளை காட்டி முறையீடு செய்த நிலையில், ஆர்டிஓ தலைமையில் ஆய்வுக் குழு நேரில் வந்து நிலங்களை ஆய்வு செய்து, விதை நிறுவனங்களிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வரை நிவாரணம் வழங்கப்படாததாலும், அவரைக்காய் உற்பத்தி குறைந்த நிலையில் விளையும் குறைந்ததாலும் விவசாயிகள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட விவசாயத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, தங்களை சரிவிலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பில் நடந்தது என்ன?