சிப்ஸ்கள் உற்பத்தி செய்தவதற்குப் பயன்படுத்தப்படும் காப்புரிமைபெற்ற உருளைக்கிழங்கு பயிர்களை சாகுபடி செய்த குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், எப்.ஸி.5 ரக உருளை கிழங்கிற்கான காப்புரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனால் காப்புரிமையை மீறி அவ்வகையான உருளைகிழங்கு பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்ட ஈடு தர வேண்டும் என பெப்சி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பெப்சி நிறுவனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, லேஸ் சிப்ஸ்களை தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர். மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் பெப்சி நிறுவனத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.