தேனி மாவட்டம் கூடலூரில் ஃபைனான்ஸ் தொழில் செய்துவந்தவர் ரங்கநாதன் (41). இவருக்கும் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ரவி (61) என்பவரது மகள் மஞ்சுவிற்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன் கூடலூர் மெயின் பஜார் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் மஞ்சு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது மகளின் மரணத்திற்கு மருமகன்தான் காரணம் என்று கருதி ரவி விரக்தியில் இருந்து வந்துள்ளார். பின்பு மாமனார் மருமகனுக்கிடையே அவ்வப்போது சண்டை எற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கூடலூர் மெயின் பஜார் சாலையிலிருந்த ரங்கநாதனை, ரவி கழுத்து, மார்பு பகுதிகளில் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த ரங்கநாதன் உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
பின்பு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனையிலே வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ரவியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.