தேனி: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி் பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகில் உள்ள கொடுவிலார்பட்டியில் அண்னதானம் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொடுவிலார்பட்டி திமுக கிளை செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார். இதற்காக தனியார் மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் நிகழ்ச்சி பற்றி தேனி தெற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் ரத்தினசபாபதிக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ரத்தினசபாபதியின் ஆதரவாளர்கள் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது மண்டபத்தில் இருந்த நாற்காலிகள் உடைக்கப்பட்டன, மேலும் திமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழிக்கபட்டன. இந்த சம்பவத்தில் ராஜ்குமாரின் உறவினர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மோதலால் அண்னதான நிகழ்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சி முற்றிலும் தடைப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!