அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் இணைப்பு விழா இன்று தேனியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தொலைக்காட்சி விவாதத்தில் தங்க தமிழ்ச்செல்வனை பார்ப்பேன். எந்த கருத்துக்களையும் தைரியமாக பேசுபவர். அதன் பிறகு சட்டமன்றத்தில்தான் தங்க தமிழ்ச்செல்வனை பார்த்திருக்கிறேன். கள்ளங்கபடமில்லாத சிரிப்புக்கு சொந்தக்காரர் தங்க தமிழ்ச்செல்வன். இவரை திமுகவில் இழுப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. தற்போது அவராகவே எங்களிடம் வந்து விட்டார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. எனவே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனக் கூறிய பன்னீர்செல்வம், தற்போது வரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இங்குள்ள அரசு மோடி, அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் திமுகவிற்கு வந்து இணைய வேண்டும். ஜெயலலிதாவும், கலைஞரும் இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது என்று, அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.