தேனி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரின் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரின் அஸ்தி நேற்று மாலை காசி கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு, அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட தாயாரின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின்னர், தாயாரின் மறைவிற்கு பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, ''தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்ததோடு அம்மையாரின் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்'' எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் புகழேந்தி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின்போது ஓ.பன்னீர்செல்வம் இறுதி வரை இருந்து துக்கத்தில் பங்கு எடுத்தார். திமுகவினர் கூட நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த நிலையில், ஈபிஎஸ் அணியினர் யாரும் வராமல் இருக்கும் தன்மை என்பது அதிமுகவை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தோடு ஈபிஎஸ் செயல்படுகிறார்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் ஓபிஎஸ்-ஐ முழுமையாக பாஜக கைவிட்டதால் இனி பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை எனக் கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது, 'அவர் அரசியலில் மூத்த தலைவர். இதேபோன்று எம்ஜிஆர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸின் நிலைப்பாட்டை கூறிய போது அவர் ஏற்கவில்லை. பின்னர் அதை உணர்ந்து கொண்டார்.
அதேபோன்று அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்'' என பாஜகவிடமிருந்து விலகுவது குறித்து புகழேந்தி சூசகமாக தெரிவித்தார்
இதையும் படிங்க: தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்.. தாயார் மறைவில் நெகிழ்ச்சி!