இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
பெயரிடப்படாத இப்படத்தில், சசிகுமாரின் நண்பர் விபத்தில் காயமடைந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆம்புலன்சில் கொண்டுசெல்வதுபோல ஒரு காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆண்டிபட்டியருகே கானா விலக்குப்பகுதியிலுள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்தது.
இதையடுத்து மருத்துவமனையின் பிரதான நுழைவுவாயிலில் ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக 10க்கும் மேற்பட்ட முறை சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த ஆம்புலன்சை பின்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் ஆட்டோவும் அதிகமாக சென்றுள்ளன. இதனால் அங்கிருந்த நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வழிறித்து முற்றுகையிட்டனர்.
இதைப்பார்த்த ஒளிப்பதிவு குழுவினர் அங்கிருந்து நைசாக நழுவி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திரும்பி வந்துட்டேனு சொல்லு... மார்வெல்லுடன் மீண்டும் இணைந்த அவெஞ்சர்!