தேனி: மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக சிறப்பு மென்பொருள் அடங்கிய ஆண்ட்ராய்டு கைப்பேசியைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய, இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுய தொழில் புரிவோர் / தனியார் பணிபுரிவோர், பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு மென்பொருள் அடங்கிய கைப்பேசி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்கள், இளநிலை பட்டப்படிப்பு பயிலும் சான்று அல்லது வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் என்பதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெறவேண்டியது) அல்லது சுய தொழில் புரிவதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெறவேண்டியது) தனியார் பணிச்சான்று, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் ஜனவரி 13ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம், மாவட்ட ஆட்சியரக வளாகம், தேனி என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04546-252085 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.