தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ளது கெங்கன் குளம். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு, மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் நீர் நிரப்பப்படுகிறது.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம், பொது ஏலம் விடப்பட்டு தனிநபர் மூலமாக மீன் வளர்க்கப்படுகிறது. இந்தாண்டுக்கான ஏலம் முருகன் என்பவரால் எடுக்கப்பட்டு கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்குஞ்சுகள் சுமார் 60ஆயிரம் அளவில் வளர்க்கப்பட்டு வந்தன.
மீன் குஞ்சுகள் விடப்பட்டு 50 நாட்களே ஆன நிலையில் இன்று (நவ 27) குளத்தில் சந்தேகமான முறையில் மீன்கள் இறந்து மிதந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறையினர் இறந்த மீன்களின் மாதரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
மேலும் தொழில் போட்டியால் குளத்தில் ஏதும் விஷம் கலக்கப்பட்டதா அல்லது மீன்களுக்கான உணவில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டதா என்பது குறித்து கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மீன்கள் இறந்ததால் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரில் அதிகமான துர்நாற்றம் வீசியதால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் ஓடையில் திறந்து விட்டனர்.