தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலக கட்டடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது ஒரு மாத காலத்திற்கு முன்பு பராமரிப்புப்பணி மேற்கொண்டு 20 நாட்களுக்கு முன்பாக வர்ணம் பூசப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை கிராம நிர்வாக அலுவலர் கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து புகை வெளியே வந்ததைக் கண்டனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜை தொடர்பு கொண்டு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வெளியூர் சென்று திரும்பிய அவர் இன்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தைத் திறந்து பார்த்த போது மேற்கூரை சேர்ந்து இடிந்து விழுந்தது. இதில், மின்விசிறி, பிரிண்டர் மெஷின் சேதமடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதிர்ஷ்டவசமாக கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் அங்கு இருக்கும்போது இந்த விபத்து நடைபெறாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு சில நாட்களே ஆன இக்கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:CCTV: சென்னையில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி