கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் உள்ளதா என கண்டறியும் பொருட்டு, தொற்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அதிகளவில் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனை செய்திட விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக போடி நகராட்சிப் பகுதிகளில் மாதிரிகள் எடுப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனமும், இரண்டு தனி மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 111 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 74 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டதில், 43 நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை மூலமாக மொத்தம் 183 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிர் காக்கும் மருந்தை டெலிவரி செய்த தென்னக ரயில்வே