தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியில் வெள்ளைப் பூண்டு சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வெள்ளைப் பூண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டு, விலை நிர்ணயிக்கப்பட்டு மொத்த விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், ஈரோட்டிலிருந்து வெள்ளைப்பூண்டுகளை ஏற்றிக்கொண்டு வடுகபட்டி சந்தைக்கு வந்துள்ளார். அண்மையில் அந்த ஓட்டுநருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்புடையவர்களிடமும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து வடுகபட்டியில் உள்ள வெள்ளைப்பூண்டு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என 17 நபர்களுக்கு இன்று மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.