தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினர், வருவாய்த்துறையினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர், வாகன ஓட்டுநர் உள்பட மூவருக்கு நேற்று (ஜூலை 3) கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் வருகையை தவிர்ப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டன. முன்னதாக, கூடலூர் நகராட்சி சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்து மருத்துவமனை வளாகம் முழவதையும் சுத்தம் செய்தனர்.
மேலும் கரோனா நோய்த் தொற்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி வைத்து அறிவிப்பு செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்திட அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கூடலூர் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.