தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கானா விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த நபருக்கு, நேற்று (ஜூன்23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது.
இதனிடையே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு தினசரி சென்று வந்ததும் தெரியவந்தது.
இதன் காரணமாக அந்த அலுவலகமும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்திட்ட வளாகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, இணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கம், இணை இயக்குநர் விவசாயம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர் இங்கு வந்து சென்றதால் இந்த வளாகம் முழுவதும் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முதன்மையானதாகக் கருதப்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரம் நோய்த் தடுப்புத் துறை அலுவலகமே மூடப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.