தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதில் பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்திருந்தது. இந்நிலையில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 8 செவிலியர்கள், 13 மருத்துவ பணியாளர்களுக்கு நேற்று (ஜூலை 25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பெரியகுளம் கிளைச்சிறைக் காப்பாளர் மற்றும் பெண் பயிற்சிக் காப்பாளர் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் பணிபுரிந்த இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. பெரியகுளம் மருத்துவமனையில் பணியில் இருக்கும் பிற மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் கிளைச் சிறையில் பணிபுரிபவர்களுக்கும் சுகாதாரத் துறையினர், கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,556ஆக அதிகரித்துள்ளது. மேலும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த 67வயது முதியவர், அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த 29வயது இளைஞர், கடமலை - மயிலை (தெ) ஒன்றிய செயலாளரின் மனைவி ஆகிய மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பெற்று வந்த 1,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,570பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றால் தேனி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.