தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பொன்ராஜ் (33). இவர் 2013ஆம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்துவந்த மறவபட்டியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பழகிவந்துள்ளார்.
மேலும் வேறொரு பெண்ணுடன் தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து அவரிடம் உறவுகொண்டு கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று (ஆக. 26) தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி பொன்ராஜிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
இந்த அபராதத் தொகையில் ரூ.50 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையின் பராமரிப்பு, கல்விச் செலவிற்காகவும், ரூ.10 ஆயிரம் அரசுக்குச் செலுத்த வேண்டும். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.