தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் ரெங்கநாதன்(21). தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு இளங்கலை கணிப்பொறி அறிவியல் படித்துவந்த இவர், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள குள்ளப்புரத்தில் தனது நண்பர் சீனிவாசன் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, நண்பர்கள் சீனிவாசன், பிரணவ், மூர்த்தி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள பெரியாறு- வைகை பேரணை இணைப்பு வாய்க்காலில் ரெங்கநாதனும் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
தற்போது பாசன தேவைக்காக 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர் ரெங்கநாதன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரெங்கநாதனை அவரது நண்பர்கள் மீட்க முயற்சித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், நீரில் அடித்துச்செல்லப்பட்ட ரெங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பொதுத்துறையினரின் அனுமதியோடு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்திவிட்டு மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், சுமார் 1 கி.மீ தூரத்தில் மாணவன் ரெங்கநாதனின் சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த மாணவரின் சடலம் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெயமங்களம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி காணொலி