தேனி: தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நேற்று (நவ.9) கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய ஆ.ராசா கூறுகையில், “இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட இந்துக்களுக்கு தனிச் சட்டம் கொண்டு வந்ததால், அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொண்டு வர முடியாமல் போனது.
ஆனால் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலமாக இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்து வெற்றி கண்டவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” என்றார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் எனக் கூறி வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒரே உணவு முறை கொண்டு வர முடியுமா? இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே உணவுப் பழக்கத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும் எனச் சொல்வார்களா? நேரு பிரதமராக இருந்தபோது அம்பேத்கா் பெண்களுக்கு சொத்துரிமை, இடஒதுக்கீடு கொண்டு வந்தாா். ஆனால், அன்று காங்கிரஸில் இருந்த சிலர் தோற்கடிக்க வைத்தனர்.
தமிழ்நாட்டில் இரண்டையும் கொண்டு வந்து கருணாநிதி நிறைவேற்றினார். இதுதான் திராவிட மாடல். சுதந்திர இந்தியாவை ஜின்னா பிரித்த பிறகு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் பேசிய ஜின்னாவிடம், அங்கிருந்த இளைஞர் உருது மொழியில் பேசாமல், எங்களது வங்க மொழியில் பேசுங்கள் என்றார். அதிலிருந்து பிறந்ததுதான் வங்கதேசம். எனவே நாடு முன்னேற மதம் தேவையில்லை. மொழிதான் வேண்டும், அதுதான் திராவிட மாடல்” என்றாா்
தொடர்ந்து பேசிய அவர், “ஒரே மதம், இஸ்லாம்தான் என்ற கொள்கையை கொண்ட பாகிஸ்தானில் பிரிவினை ஏற்பட்டது. அதேபோல கிறிஸ்துவம் மட்டும் தான் என்ற ஒரு மதக்கொள்கையை கொண்ட நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிரிந்தன. எனவே, உலகில் எந்தவொரு நாடும் ஒரே மதத்தால் ஒன்றிணைக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரே மதத்திற்குள் கட்டமைக்கப் பார்க்கிறது.
ஒரு புறம் ஊழல், மறுபுறம் மதம் என்ற இரண்டையும் இன்றைக்கு எதிர்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அதனை வலுவாக எதிர்ப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தான்” என்று கூறினார்.