மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேனியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். இதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
முன்னதாக கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை தவிர, அவர்களின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. ஒற்றுமை இல்லை.
கேரளாவில் காங்கிரஸை ஆதரிக்கிறீர்களா..? கம்யூனிஸ்டை ஆதரிக்கிறீர்களா..? என்றால் தெளிவான பதில் இல்லை. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். மீண்டும் மத்தியில் மோடிதான் பிரதமராக வருவார்.
உலக நாடுகளில் இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு நாம் பாடுபடவேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் என்றும் கர்நாடகாவில் பேசியுள்ளார் ராகுல்காந்தி. இவரைத்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், தமிழகம் சுடுகாடாகிவிடும். அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்க வேண்டும். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம், என்றார்.