தேனி பெரியகுளம் சாலையில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. அரண்மனைப்புதூர், ஊஞ்சாம்பட்டி, ஜங்கால்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட இந்த அலுவலகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டோர்களின் அலுவலகங்களும் உள்ளன. இங்குள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுப்பன் தெருவைச் சேர்ந்த 22 வயது பெண், தற்காலிக கணினி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பணிபுரிந்து வந்த அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.
முன்னதாக தேனி - அல்லிநகரம் நகராட்சி சுகாதார துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்து அலுவலகத்தை சுத்தம் செய்தனர். இதனிடையே நோய்த்தொற்று பாதிப்படைந்த பெண் பணியாளர், பரிசோதனை செய்த பிறகும் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளார். இதனால் அவருடன் பணிபுரிந்து வந்த அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.