தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவர் நேற்று இரவு (மே 16) காலமானார். இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர். இவர்களின் ஆரோன் என்ற மகன் திருச்சியில் கல்லூரி படித்து வந்த காலத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த நிலையில் ஆரோன் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்.
இதையடுத்து ஜான் பீட்டர் குடும்பத்தினர் ஊர் பெரியவர்கள் அனைவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பின்னரும் கோட்டூர் தேவாலயத்தில் திருமணத்தை நடத்த விடாமல் எதிர்ப்பு தெரிவித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் ஜான் பீட்டர் நேற்று திடீரென காலமானார். அவருக்கு கிறித்துவ முறைப்படி சடங்குகள் செய்து புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஊர் பெரியவர்களின் முன்னிலையில் ஜான் பீட்டரின் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என ஊர் மக்கள் கூறுவதாக ஜான் பீட்டர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் உயிரிழந்த ஜான் பீட்டர் இன் உடலை அடக்கம் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே வைத்திருந்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவரது உடல் கோட்டூர் மயானத்தில் கிறிஸ்தவர்களின் முறைப்படி புதைக்கப்பட்டது. மதம் மாறி திருமணம் செய்ததால் இறந்தவரின் உடலை புதைக்க விடாமல் செய்த சம்பவம் தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதம் மாறி திருமணம் செய்ததால் ஊர் பெரியவர்கள் காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம் என கூறிய பொதுமக்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே வைத்து தவித்த குடும்பம் மனித நேயம் கேள்விக் குறியாகி உள்ள சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுடன் நெருக்கமா? - மனம் திறந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்