தமிழக - கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு விழா,மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக – கேரள அரசுகள் இணைந்து நடத்துகின்றன. இத்திருவிழாவிற்காக தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இரு மாநில வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளுடனான ஆலோசணைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் கம்பத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தாண்டிற்கான சித்ரா பௌர்ணமி விழா வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவிற்கான கொடி மரம் ஊன்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் கொடிமரம் நட்டு கண்ணகி கொடி ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தும் காப்புகட்டியும் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.