தேனி மாவட்டம், கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா(23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீதா இரண்டு வருடங்களுக்கு முன்பே அவரை பிரிந்து உதயகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதேபோல், முருகனும் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இதனால் தனது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையான ஹரிஷை தனது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார் கீதா. பக்கத்து வீட்டிலேயே தாய் குடியிருந்ததால், அடிக்கடி தாய் வீட்டிற்கு வந்த ஹரிஷ், இரவு நேரத்திலும் தாயுடனே தங்கியுள்ளார். இதனால் கீதாவிற்கும், உதயகுமாருக்கும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
உல்லாசத்திற்கு இடையூறு:
இதனிடையே கீதாவின் தங்கையான புவனேஸ்வரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து பக்கத்திலேயே குடியிருந்துள்ளார். அப்போது கார்த்திக்குமாரும் கீதா வீட்டிற்கு அடிக்கடி வந்து மனைவியின் அக்காவுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல உதயகுமாரும், கீதாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு ஹரிஷ் இடையூறாக இருப்பதாக மூவரும் எண்ணியுள்ளனர். அதனால் அவனுக்கு சாப்பாடு தராமலும், சில சமயம் இரவு நேரம் என்பதையும் பார்க்காமல் ஹரிஷை வெளியில் தள்ளி கதவை பூட்டுவதை கீதா வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
கொலை செய்ய திட்டம்:
இந்நிலையில்,நேற்றுமுன்தினம் கீதாவின் சகோதரியான புவனேஸ்வரி, அவரது கணவர் கார்த்திக்குமார் ஆகியோர் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. கார்த்திக்குமார், புவனேஸ்வரியிடம் ஹரிஷ் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக உதயகுமாரும், கீதாவும் கூறியுள்ளனர். அந்த சமயத்தில்தான் ஹரிஷை கொலை செய்வது என்று நான்கு பேரும் முடிவு செய்தனர்.
முகத்தை சிதைத்து கொலை:
இதைதொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்து நான்கு பேரும் ஹரிஷை கோம்பை கால்நடை மருத்துவமனைக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதிக்கு சென்றவுடன் கார்த்திக்குமார் கம்பியால் ஹரிஷின் கழுத்தில் குத்தியதாகத் தெரிகிறது. அதன் பின்னர் புவனேஸ்வரி அந்த சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். கீதாவின் இரண்டாவது கணவர் உதயகுமார் அங்கிருந்த செங்கலால் சிறுவனின் முகத்தை அடித்து சிதைத்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நான்கு பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதன்பிறகு இரவு 9 மணியளவில் குழந்தையை காணும் என்று கீதாவின் பெற்றோர், ஹரிஷை தேடியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கீதாவும் மகனை தேடியதோடு மட்டுமல்லாமல் காவல்துறையில் மகனை காணும் என்று புகாரும் அளித்தார். திங்கட்கிழமை காலையில் மயானப் பகுதிக்குச் சென்றவர்கள் ஹரிஷ் இறந்து கிடந்ததைப் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போதுதான், குழந்தையை நான்கு பேரும் ஆட்டோவில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தையை அடித்து கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.