தேனி: இந்தியாவில் 77 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின், தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பின், தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருதை வழங்க உள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதலமைச்சர் காவல் விருதுக்காக தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுத்தல் போன்று பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 6 காவல்துறை அதிகாரிகளின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து சிறப்பாக செயல்பட்டதாக தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷுக்கு முதலமைச்சரின் காவல் விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேனி மாவட்டத்தின் 15வது காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவீன் உமேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். தேனி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டதால், தற்போது இவருக்கு முதலமைச்சரின் விருது வழங்கப்பட உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்து அமைந்திருக்கும் தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும். தற்போது தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு அதனை சிறிய சிறிய அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவீன் உமேஷ் பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் ஆறு கோடி மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சாவை டோங்கரே தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் தேனி மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வரும் போதை ஊசி பயன்படுத்துவதாக டோங்கரே தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சியில் இருந்து போதை ஊசிகளை வாங்கி தேனி மாவட்டத்தில் இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்தனர்.
மேலும் அந்த விசாரணையில் புனேயிலிருந்து மருந்து நிறுவனத்தின் மூலம் ஊக்க மருந்துகளை வாங்கி சென்னை, ஓசூர், தேனி, கோவை, திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா மாநிலத்திலும் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து ஊக்க மருந்து கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனால் இளைஞர்கள் மத்தியில் போதை ஊசி புழக்கம் தடுக்கப்பட்டது. மேலும் டோங்கரே தலைமையிலான போலீசார் தேனி மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து அவைகள் தடுக்கப்பட்டு உள்ளன. தேனி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கஞ்சா விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதால் தான், டோங்கரே பிரவீன் உமேஷுக்கு முதலமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!