தேனி மாவட்டம் போடி சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தந்த இரா.முத்தரசன் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். திமுக கூட்டணி அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை வென்று, ஆட்சியை கைப்பற்றும் என்பது உறுதி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களின் கட்சிகளால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டில் பாஜக அதிக இடங்களை பிடித்து சட்டசபைக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரானதுடன் வெளியிடப்படும். கரோனா நேரத்தில் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அந்த நேரத்தில் மாநில அரசு ஐந்தாயிரம் ரூபாயும், மத்திய அரசு ஏழாயிரத்து ஐநூறு ரூபாயும் வழக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால், அப்போது எந்தவித உதவியையும் செய்யவில்லை.
இப்போது பொங்கல் உதவித்தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 ரூபாயை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது தேர்தலை மனதில் கொண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இந்தத் தேர்தலில் அதிமுக அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க : இந்து, இஸ்லாமியரிடையே மோதல்: காவல் துறை விசாரணை!