தேனி: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பருவமழைக் காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்புக்குழுவினரை அமைத்து ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 135.90 அடி என உள்ளது. இதனையடுத்து அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.
மத்திய நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழ்நாடு தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
பிறகு குமுளி 1ஆம் மைலில் உள்ள பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறப்பு